"சரியான நிதித்திட்டமிடல் மூலம் பெண்கள் சுயசார்புடன், சீரான முன்னேற்றப் பாதையில் குடும்பத்தை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூல் கொடுக்கிறது. இதை ஒரு நிதித் தன்னம்பிக்கை நூல் என்றே சொல்லலாம்."
"தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகள், கவனத்தில் கொள்ள வேண்டிய நிதி ஆவணங்கள், அவற்றை முறைப்படுத்துதல், முதலியவற்றின் அடிப்படைகளைத் தெரியாத பெண்கள் கூட இந்நூலைப் படித்துத் தெளிவுபெறலாம். பெண்களுக்கான அவசியமான கையேடு இது."
"குடும்ப நிதியை நிர்வகிப்பதில் பெண்களின் அறியாமை மற்றும் இயலாமையை போக்கவும், அவர்களை ஆற்றல்ப்படுத்தவும் இந்நூல் பெரிதும் உதவும். ஒவ்வொரு பெண்ணும் கையில் வைத்திருக்கவேண்டிய முக்கியமான புத்தகம் இது"
"பெண்கள் தங்களது குடும்பத்தின் நிதிமேலாண்மைப் பொறுப்பைக் கையிலெடுக்கவேண்டிய நேரம் இது. முதலீடுகள், காப்பீடுகள், பங்குசந்தை, ஒய்வூதியம் போன்ற முக்கியமான விஷயங்களில் பெண்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான அச்சங்களையும் சந்தேகங்களையும் களையும் இப்புத்தகம் ஒரு பெரிய கண்திறப்பாக உள்ளது."
"பெண்களுக்கு இந்தக்காலம் அளிக்கும் சவால்கள் ஏராளம். அவற்றில் அதிமுக்கியமானது அவர்கள் தங்களது நிதியைத் திட்டமிடுவதாகும். சம்பாதிக்கும் பணத்தை நிர்வகிப்பது, எதிர்காலக் குறிக்கோள்களைத் திட்டமிடுவது, இருக்கக்கூடிய பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வுசெய்வது, ஆயுள் மற்றும் உடல்நலத்தைக் காப்பீடு செய்வது, ஓய்வுகால வாழ்வைத் திட்டமிடுவது முதலிய அத்தியாவசியமான விஷயங்களில் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது ‘நிதி நிம்மதி. பெண்களுக்கு மட்டுமல்லாமல் இந்நூலைப் படிக்கும் எவருக்கும் பயன்படும் வகையில் இது உள்ளது. நிதித்திட்டமிடல் துறையில் நீண்டகால அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அபூபக்கர் சித்திக் எல்லோரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய ஒரு ஆலோசனைக் கையேட்டை எழுதியுள்ளார்."